நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணைக் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு முகமை அவர்களது பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரியா சக்ரவர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி இருவரும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு போதை மருந்து விநியோகிக்கும் கூட்டமைப்பு ஒன்றில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து வருவதாகவும், பல விநியோகிஸ்தர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இது குறித்து, போதை மருந்து தடுப்பு முகமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரரும் போதைப்பொருள் பரிவர்த்தனைகளுக்கு நிதியளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ராபிக் பொருள்கள் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கடுமையான பிரிவான 27ஏ வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.