டெல்லி: கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியதாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாக விடியோவை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரவீனா டண்டன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயேசு குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக நடிகை ரவீனா டண்டன், பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான், நகைச்சுவை பிரபலம் பாரதி சிங் ஆகியோர் மீது பஞ்சாப் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஃபாரா கானின் யூ-ட்யூப் காமெடி ஷோ நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவ சமூகம் பற்றி இவர்கள் தவறாகப் பேசியதாகக் கூறப்பட்டது. இதில், அல்லேலூயா என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் விடியோவை பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார் ரவீனா டண்டன்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோ லிங்கை தயவுசெய்து முழுமையாகப் பார்க்கவும். நான் மதஉணர்வைப் புண்படுத்தும்விதமாக எதுவும் பேசவில்லை. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எங்கள் மூவருக்கும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்திருக்கிறோம் என்று கருதினால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்கள் இயேசுவை வணங்கும்போதும் உச்சரிக்கும் அல்லேலூயா என்ற சொல்லை இவர்கள் அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், ரவீனா டண்டன் விடியோ மூலம் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.