2005ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி ஆகியோரின் நடிப்பில், ஷாத் அலி இயக்கத்தில் வெளியாகி பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’பண்டி அவுர் பப்லி’ (Bunty Aur Babli)
தற்போது இப்படத்தின் தொடர்ச்சியாக ’பண்டி அவுர் பப்லி - 2’ திரைப்படம், ’சுல்தான்’, ’டைகர் ஜிந்தா ஹே’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வருண் வி ஷர்மா இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ளது.
இதில் ராணி முகர்ஜி முதல் பாகத்தில் ஏற்று நடித்த ’பப்லி’ கதாபாத்திரத்திலும், அபிஷேக் பச்சனுக்கு பதிலாக சைஃப் அலி கான் ’பண்டி’ கதாபாத்திரத்திலும் தோன்றுகின்றனர்.
மேலும், ’கல்லி பாய்’ புகழ் சித்தாந்த் சதுர்வேதி, புதுமுகம் ஷர்வாரி ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இந்த வருடம் முதல் காலாண்டில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பெருமளவு முடிந்த நிலையில், மார்ச் மாதம் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தில் எஞ்சியிருந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு படப்பிடிப்புப் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.
யாஷ் ராஜ் நிறுவனம் இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், தனி மனித இடைவெளி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலமாக சைஃப் அலி கானும் ராணி முகர்ஜியும் 11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திரையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தீவிர கண்காணிப்பில் பிரபல நடிகைகள், தயாரிப்பாளர்!