இணையத்தொடர் எடுப்பதாகக்கூறி இளம் பெண்கள், மாடல்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள் எடுத்து இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்து, பதிவேற்றம் செய்ததாக எழுந்தப் புகாரின் அடிப்படையில், தொழில் அதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை மும்பை காவல் துறையினர் ஜூலை 19ஆம் தேதி கைது செய்தனர்.
ராஜ் குந்த்ராவுடன் ரியான் தோர்பே என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவர் மீதும் 1,500 பக்க குற்றப்பத்திரிகையை காவல் துறையினர் செப்டம்பர் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவர்கள் இருவர் மட்டுமல்லாது சிங்கப்பூரில் வசிக்கும் யாஷ் தாக்கூர் மற்றும் லண்டனைச் சேர்ந்த பர்தீப் பக்ஷி ஆகியோர் குற்றப்பத்திரிகையில் தேடப்படும் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.
ராஜ் குந்த்ரா எடுத்திருக்கும் படங்கள் பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் அல்ல, அவை பாலுணர்வைச் சொல்லும் கலையம்சம் கொண்டவை என்று கூறி நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா தரப்பு பிணை கேட்டு வழக்கு தாக்கல் செய்தது.