பிரபல எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ட்விட்டர் பதிவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா அளித்துள்ள பதில் குறித்து ரஹ்மான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டைச் சேர்ந்த இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் புகழ்பெற்றவராகத் திகழ்கிறார். கடந்தாண்டு 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் 10ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் தனது மகள் கதீஜா ரஹ்மானுடன் கலந்துகொண்டார்.
அப்போது கதீஜா கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் புர்கா அணிந்து வந்திருந்தார். இது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியது. கதீஜாவின் உடை குறித்து பிரபல எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனக்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளைப் பார்க்கும்போது, எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உள்ளது. பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்களைக் கூட எளிதாக மூளைச் சலவை செய்வது வேதனையாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இவரின் இந்தப் பதிவுக்கு கதீஜா, ”அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக எனக்குப் பெருமையாக உள்ளது.
உண்மையான பெண்ணியம் என்னவென்று கூகுள் செய்து பாருங்கள். அது மற்ற பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், அவரது தந்தையின் பெயரை இணைத்துப் பேசுவதும் அல்ல. உங்களுடைய ஆய்வுக்காக நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாக நினைவில்லை. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள் என்று பதில் கூறியிருந்தார்.
தஸ்லிமா நஸ்ரின் - கதீஜாவின் இந்தக் கருத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தனது தரப்பு கருத்தைக் கூறியுள்ளார். அதில், எனது குழந்தைகள் மரபு ரீதியாக வளர்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. அவர்கள் எங்கள் கஷ்டங்கள், பிரச்னைகள் குறித்து நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் நல்லது எது கெட்டது எது என்று. தனது ஆடை குறித்த பதிவை கதீஜா தனது சமூகவலைதளத்தில் பதிவிடும் முன்னர் அவள் என்னிடம் எதுவும் கூறவில்லை. அது அவளுடைய விருப்பம். கதீஜாவின் உடை மத விஷயத்தை தாண்டி அது அவளுடைய தனிப்பட்ட விருப்பம். அவள் அணியும் ஆடை அவளது சுதந்திரம்.
ஏ.ஆர் ரஹ்மானின் பிள்ளைகள்
இந்த விஷயத்தை நான் மதம் தாண்டி உளவியல் ரீதியாகப் பார்க்கிறேன். அவள் பாடிய பாட்டைக் கிட்டதட்ட 10 லட்சம் பேர் மொபைல் ரிங்டோனாக வைத்துள்ளனர். ஆகையால் தயவுசெய்து அவளது தன்னம்பிக்கை இழக்கும் வகையில் யாரும் பேச வேண்டாம். ஆண்கள் புர்கா அணிய வேண்டியது இல்லை. ஒருவேளை அணியும் சூழல் இருந்திருந்தால் இப்போது நான் அணிந்திருப்பேன். அவளுக்குத் தெரியும் அவளது சுதந்திரம் எதுவென்று. பணிப்பெண்ணின் அம்மா, பணிப்பெண்ணின் உறவினர்கள் இறப்பு வீட்டிற்கு கதீஜா சென்று வருவதை நானே ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்” என்றார்.