அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரைன்ட் மற்றும் அவரது மகள் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவரது மறைவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டுத் துறையினர் மட்டுமல்லாது திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கூடைப்பந்து அமைப்பின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து ரசிகர்களால் மாம்பா என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டுவந்த கோப் பிரைன்ட் மறைவு, இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே கிராமி விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, கோப் பிரைன்ட்க்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப் பிரைன்ட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரியங்கா சோப்ரா இது தொடர்பாக புகைப்படம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தனது ஆள்காட்டி விரலில் 24 என்ற எண்ணை எழுதியதோடு, RIP Mamba என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். 24 என்பது கோப் பிரைன்ட் பயன்படுத்திவந்த ஜெர்ஸியின் எண் ஆகும்.
மேலும், 'கோப் பிரைன்ட் ஒரு தலைமுறையையே ஈர்த்துள்ளவர். போராட்ட குணம் கொண்ட அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எப்போதும் என் நினைவில் நீங்கள் இருப்பீர்கள்' எனவும் பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் மரணமடைந்த கூடைப்பந்து நட்சத்திரம்!