நடிகர் விஜய்யுடன் தமிழன் படத்தில் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா, பின்னாளில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து ஹாலிவுட் படங்கள் சிலவற்றிலும் நடித்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் குவாண்டிகோ தொலைக்காட்சி தொடரின்மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
பின்னர் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சோப்ரா தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இந்தத் தம்பதியினர் அவ்வபோது சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்களை பதிவிடுவதுண்டு. சமீபத்தில் இந்தத் தம்பதியினர் திருமண வாழ்வின் முதலாம் ஆண்டை நிறைவுசெய்தனர்.
இதனிடையே பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தனக்கு அளித்த கிறிஸ்துமஸ் பரிசு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் காணொலியையும் பதிவிட்டார். அதில் நிக் ஜோனஸ் பரிசாக அளித்த பனியில் ஓடும் ஸ்னோமொபைல் வாகனத்தை பிரியங்கா உற்சாகமாக ஓட்டிச் சென்றார். மேலும் தனது கணவர் நிக் ஜோனஸ் தன்னை நன்கு அறிந்து வைத்துள்ளதாக சிலாகித்த பிரியங்கா சோப்ரா, நன்றி பேபி என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.