சென்ற மாதத்திற்கான தன் வீட்டு மின் கட்டணம் அதிகமான வந்துள்ளதாக நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார்.
அதானி எலெக்டிரிசிட்டி நிறுவனத்தை டேக் செய்து டாப்ஸி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் அதற்கு விளக்கமளித்துள்ளது. அதில் ”கரோனா தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து மீட்டர் வாசிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீட்டர் வாசிப்பை நாங்கள் மீண்டும் தொடங்கியுள்ளோம். கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களிலும் குளிர் காலம் நிலவியது. ஆனால் அதற்கு பிந்தை ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கோடைக்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் மின் உபயோகம் அதிகமாக இருந்துள்ளது. தவிர ஊரடங்கு காரணமாகவும் பெரும்பாலான வீடுகளில் மின்சார உபயோகம் அதிக அளவில் உள்ளது” என்று மும்பை அதானி மின் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
”மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படிதான் ரசீதுத் தொகை கணக்கிடப்படும். நுகர்வோருக்கு அவர்களது உண்மையான மின் உபயோகத்தைப் பொருத்துதான் சலுகைகளுடன் ரசீதுகள் வழங்கப்படுகின்றன” என்றும் செய்தித் தொடர்பாளர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.