இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கபி ஈத் கபி தீபாவளி'. இப்படத்தை சஜித் நதியாவாலா தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சல்மான் கானுடன் இணையும் பூஜா ஹெக்டே - 'கபி ஈத் கபி தீபாவளி' - சல்மான் கான் புதியப்படம்
சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் 'கபி ஈத் கபி தீபாவளி' படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா கூறுகையில், ஹவுஸ் ஃபுல் நான்கு படங்களில் பூஜா ஹெக்டேவுடன் பணியாற்றியுள்ளேன். இதனால் அவர் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். திரையில் பூஜா சல்மான் கான் ஜோடி புதுமையாக இருக்கும். பூஜா கதைக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பார் என்றார்.
படத்தின் இயக்குநர் சாம்ஜி கூறுகையில், நான் கிக் 2 படம் இயக்கும் முன்பே இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டேன். நானும் சல்மான் கானும் ஆறு வருட இடைவேளைக்கு பின் இப்படத்தின் மூலம் பணியாற்ற உள்ளோம். கபி ஈத் கபி தீபாவளி முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்தை கொண்டது. இப்படம் நிச்சயம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அமையும். அதுமட்டுமல்லாது திரையில் சல்மான் கானை ரசிகர்கள் புதிய பரிமாணத்தில் பார்ப்பார்கள் என்றார். இப்படத்தை 2021ஆம் ஆண்டு ஈத் பெருநாளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.