'தி ஸ்கை இஸ் பிங்க்' ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் பரவலாக ஷேர் செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா காவல்துறையினர் படம் குறித்து நகைச்சுவையான கருத்தை வெளியிட்டுள்ளனர்.
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் பிரியங்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் பாலிவுட் படம் இது என்பதால் ஹிந்தி சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் ட்ரெய்லரும் மொத்த கதையை விவரிக்கும் விதமாக அமைந்திருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதில் ஒரு காட்சியில், பிரியங்கா தனது கணவர் ஃபரான் அக்தரிடம் நோயால் துன்புற்று வரும் மகளின் வாழ்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க வேண்டும் என்பார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பதை மகாராஷ்டிரா காவல்துறையினர் ட்விட்டரில் நகைச்சுவையாக விளக்கியுள்ளனர். குறிப்பாக, இவ்வாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்டால், 'ஐபிசி பிரிவு 393இன் படி ஏழு ஆண்டு சிறைத்தண்டனையுடன், அபராதம் விதிக்கப்படும்' என்று வேடிக்கையாக பிரியங்கா மற்றும் ஃபாரன் ஆகியோரை ஹேஷ்டேக்கில் டேக் செய்து மகாராஷ்டிரா காவல்துறை ட்வீட் செய்தனர்.