அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பலர் இனவெறிக்கும் நிறவெறிக்கும் எதிராக தங்களது எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து, பல இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவில் நிறவெறிக்கு எதிராக மக்களும் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி தென்னிந்திய பிரபலங்கள் வரை பலரும் நிறவெறிக்கு எதிராக தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அவர்களுள் பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவர். 'Black Lives Matter' என்னும் நிறவெறிக்கு எதிரான பிரச்சாரத்திற்காக பிரியங்காவும் குரல் கொடுத்தார்.
இதில், முன்னர் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் பிரியங்கா நடித்ததை சுட்டிக் காட்டி, தற்போது அவர் 'Black Lives Matter' பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது, பிரியங்காவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள், அவரது பழைய நேர்காணல் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
அந்த நேர்காணலில் கடந்த காலத்தில் பிரியங்கா ஏன் ஃபேர்னஸ் கிரீம் சாதனங்களுக்காக விளம்பரம் செய்தார் என்கின்ற கேள்விக்கு, ”அத்தகைய விளம்பரங்களில் நடித்ததன் பிறகு என்னை நானே மோசமாக உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்களுக்காக நடிப்பதை நிறுத்தினேன். என் உறவினர்கள் அனைவரும் சிவப்பாக இருப்பார்கள். ஆனால் என் தந்தையின் நிறத்தை ஒத்து, நானும் மாநிறத்தை பெற்றேன். என் பஞ்சாபி குடும்பத்தினர் என்னை விளையாட்டாக 'கருப்பு, கருப்பு' என்றே அழைத்தனர். எனக்கு 13 வயது இருக்கும்போது நான் என் நிறத்தை மாற்றிக்கொள்ள ஃபேர்னஸ் கிரீம்களை உபயோகப்படுத்த நினைத்தேன்.
அதன் பின்னர் நான் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது அது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. பின்பு ஒராண்டு காலம் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடித்தேன். நான் அவ்வாறு செய்திருக்கக்கூடாது. பின்பு அந்த காரியத்தை செய்ய நான் விரும்பவில்லை. எனக்கு 21 அல்லது 22 வயதாகும்போது துறையில் எனக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தேன்” என்று பிரியங்கா பதிலளித்துள்ளார்.
ஒருவேளை அதிக பணம் கொடுத்தால் மறுபடியும் அது போன்ற விளம்பரங்களில் நடிப்பீர்களா எனும் நெறியாளரின் கேள்விக்கு, ”பலமுறை பெரிய தொகைக்கு அத்தகைய விளம்பரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்” என்றும் அந்தக் காணொலியில் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இனவெறிக்கு எதிராகக் குரல் எழுப்பும் நிக் ஜோனஸ்