தொலைக்காட்சியில் நடிகை - மாடலாக இருப்பவர் பயல் ரோஹித்கி. இவர் செப்டம்பர் 21ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ வடமாநிலங்களில் வைரலானது.
இதயைடுத்து ராஜஸ்தானிலுள்ள பூண்டியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையினரிடம் அக்டோபர் 10ஆம் தேதி இவர் மீது புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் பயல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பயல் தனது கைது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், நேரு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டதற்காக ராஜஸ்தான் காவல் துறை கைது செய்துள்ளது. பதிவிட்ட வீடியோ கூகுளிலுள்ள தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இங்கு கருத்து சுதந்திரம் நகைச்சுவையாகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இவர் இந்த ட்வீட்டை பிரமர் அலுவலகம் - உள்துறை அமைச்சகத்திற்கும் டேக் செய்திருந்தார்.
தகவல் அடிப்படையில், பூண்டியிலுள்ள சதர் காவல் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை அகமதாபாத் சென்று பயலை கைது செய்தனர். அப்போது பயல், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த கைது குறித்து பூண்டி எஸ்.பி., மம்தா குப்தா கூறுகையில், ”பயல் ரோஹத்கி மீது இந்திய தண்டனைச் சட்டம் - ஐடி சட்டத்தின் 504 - 505 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் பயலுக்கு பலமுறை அறிவிப்புக்களை அனுப்பினோம். ஆனால் அவர் விசாரனைக்கு ஒத்துழைக்கவில்லை. தற்போது நாங்கள் அவரை அகமதாபத்திலிருந்து பூண்டிக்கு அழைத்து வந்தோம் என்றார்.
இந்நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து பயலை விசாரிக்க உத்தரவிட்ட பெருநகர நீதிமன்றம் தற்போது அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.