அனுராக் காஷ்யப் மீது வழக்கு தொடரும் பாயல் கோஷ் - அனுராக் காஷ்யப் மீது வழக்குப் பதியும் பாயல்
மும்பை: அனுராக் காஷ்யப்புக்கு எதிராக ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வரும் அனுராக் காஷ்யப், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை பாயல் கோஷ் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இவரின் இந்தக் குற்றச்சாட்டு தற்போது பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்து பல நடிகைகள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், பாயல் கோஷ் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதின் சத்புட் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முகுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராக் காஷ்யப் குறித்து பாயல் கோஷ் கூறுகையில், “அனுராக் காஷ்யப் போதைப்பொருளை உட்கொள்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றபோது நிச்சயம் ஏதோ ஒன்றை உட்கொண்டுள்ளார். அது நிச்சயமாக சிகரெட் அல்ல. அனுராக்கை குறித்து ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள் பலர் அவர்களது வாழ்வாதாரத்திற்காக அவ்வாறு பேசுகின்றனர். உண்மை வெளிவரும் போது நிச்சயம் அவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் வேலை தொடர்பாக அனுராக் காஷ்யப்பை சந்தித்தேன். அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். அங்கு உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்று என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
எனவே தயவுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். படைப்பாற்றல் மிக்க இயக்குநருக்கு பின்னால் இருக்கும் ஒரு அரக்கனை இந்த நாட்டிற்கு காண்பிக்க வேண்டும். இதனால் எனக்கு தீங்கு விளையும் என்பதையும் நான் அறிவேன். இருப்பினும் அவருக்கு எதிராக நான் நடவடிக்கை முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.