திரையுலக வரலாற்றில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்தவகையில், திரையுலகம், அரசியல், வேளாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கையைத் தழுவி திரைப்படங்கள் உருவாகின்றன.
குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடி, நடிகை சாவித்ரி, கிரிக்கெட் வீரர் தோனி, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் என்டிஆர், ராஜசேகர் ரெட்டி உள்ளிட்ட பலரது வாழ்க்கையையும் மையமாக வைத்து ஏற்கனவே திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகிவருகின்றன.
இந்த நிலையில், மறைந்த குடியரசு முன்னாள்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகவுள்ளது. விஞ்ஞான அறிவியல் துறையில் சாதனை படைத்து உலக அரங்கில் இந்தியாவுக்குப் புகழ்பெற்றுத் தந்த அப்துல் கலாமின் இளமைப் பருவம்முதல் முதுமைப் பருவம்வரை அவரது வாழ்க்கைப் பயணத்தை இந்தப்படம் சித்திரிக்கவுள்ளது.