தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதலுக்காக எவ்வளவு பொறுத்துக்கொள்வது?... வேதனைத் தெரிவிக்கும் நவாஸுதின் மனைவி - Nawazuddin Siddiqui's wife alleges mental and physical torture against in-laws

பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி ஆலியா நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், நவாஸுதின், அவரது குடும்பத்தாரால்தான் பெரும் இன்னல்களுக்கு ஆளானதாகவும், நவாஸ் குறித்த பக்கங்களை தன் வாழ்வின் மோசமான கனவாக எண்ணி அழிக்க விரும்புவதாகவும் ஆலியா தெரிவித்துள்ளார்.

வேதனைத் தெரிவிக்கும் நவாஸுதின் மனைவி
வேதனைத் தெரிவிக்கும் நவாஸுதின் மனைவி

By

Published : May 20, 2020, 4:20 PM IST

சேக்ரட் கேம்ஸ், கேங்ஸ் ஆஃப் வஸேபூர், தலாஷ், மாண்டோ, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மூலம் தன் தனித்துவ நடிப்பால் சிறந்து விளங்கி, உலக திரைப்பட ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்.

பாலிவுட் தாண்டி, தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக ’பேட்ட’படத்தில் நடித்து தனி முத்திரையைப் பதித்துள்ள அவர் நேற்று தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால், அவரது மனைவி ஆலியா நவாஸின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னதாக விவாகரத்து கோருவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவை அனைத்துமே தீவிரமான பிரச்னைகள் எனக் குறிப்பிட்டிருந்த ஆலியா தற்போது இது குறித்து பேசியுள்ளார்.

அஞ்சலி எனும் இயற்பெயர் கொண்ட ஆலியா கூறுகையில், ”இந்தப் பிரச்னைகள் வெகு நாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டன. நான் நவாஸை திருமணம் செய்தது முதலே இவை தொடர்ந்து வருகின்றன. இவற்றை சரி செய்ய கடுமையாக முயன்றும் முடியாததால் தற்போது இந்த முடிவை எட்டியுள்ளேன்

என்னுடைய சுய மரியாதையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தேன். வீட்டில் தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் என அனைவரின் மத்தியில் மிகுந்த அக்கறையுடன் வளர்க்கபட்ட நான், திருமணத்திற்காக மதமாற்றம் செய்யப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

நவாஸ் என்னை ஒரு போதும் அடித்ததில்லை. ஆனால் அவர் குரலெழுப்பி விவாதிக்கும் விதத்தை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை. அவரது குடும்பத்தினரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் இன்னல்களுக்கு ஆளானேன். நவாஸின் தாய், உடன் பிறந்தவர்கள் என்னுடன் மும்பையில் தங்கி இருந்தனர். நவாஸின் முதல் மனைவியும் இதே புகாரைத்தான் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

நவாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் ஏற்கனவே இவர்கள்மீது வழக்குத் தொடர்ந்து, நான்கு பேர் விவாகரத்து பெற்றிருக்கின்றனர். இது இவர்களின் குடும்பத்திற்கு வழக்கமாகிவிட்டது. காதலின் பெயரில் எவ்வளவு விஷயங்களைத் தாங்கிக் கொள்வது.

குடும்பம், குழந்தைகள் மீதும் நவாஸ் போதிய கவனம் செலுத்தவில்லை. என் குழந்தைகளுக்கு கடைசியாக தன் தந்தையை எப்போது பார்த்தார்கள் என்பதுகூட மறந்துவிட்டது. என் குழந்தைகள் என்னுடைய பாதுகாப்பில் மட்டுமே இருக்க அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளேன். சில மனிதர்களுக்கு புகழைக் கையாளத் தெரியாது, அவர்களில் நவாஸும் ஒருவர். எங்கள் திருமண வாழ்வின் ஆரம்பத்தில் தன்னுடைய வருமானம் மட்டுமே போதும் என நவாஸ் சொல்லி இருந்தார். இப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு பிரபல நட்சத்திரத்தின் மனைவியாக அல்லாமல் ஒரு சுய மரியாதை மிக்க பெண்ணாக நான் வாழ விரும்புகிறேன். நவாஸ் குறித்த பக்கங்களை தன் வாழ்வின் மோசமான கனவாக எண்ணி அழிக்க விரும்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க :'மக்கள் செல்வன்' நவாஸுதின் சித்திக்கின் திரைப்பட பயணத்தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details