மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் நசிருதீன் ஷா மகள் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பை வெர்சோவா பகுதி போலீசார் நசிருதீன் ஷா மகள் ஹீபா ஷா மீது பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் இருவரை தாக்கியதற்கான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
தி ஃபெலைன் பவுன்டேஷன் நடத்தி வரும் கால்நடை மருத்துவமனைக்கு ஹீபா ஷா தனது பூனைக்கு ஊசி போடுவதற்காக வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதுபற்றி அறக்கட்டளையின் அறங்காவலர் மிருது கோசலா கூறியதாவது:
ஜனவரி 16ஆம் தேதி மதியம் 2.50 மணியளவில் நடிகை ஹீபா ஷா எங்களது கால்நடை மருத்துவமனைக்கு தனது இரண்டு பூனைக்குட்டிகளுக்கு ஊசி போடுவதற்காக வந்தார். அப்போது அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்ததால் மருத்துவமனையின் கவனிப்பாளர் ஐந்து நிமிடம் காத்திருக்குமாறு தெரிவித்தார்.
இரண்டு நிமிடம் வரை காத்திருந்த ஹீமா ஷா, திடீரென எங்கள் ஊழியர்களிடம் கத்த தொடங்கினார்.
'நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா? உதவியாளர் யாரும் இல்லாமல் என்னை எப்படி நீங்கள் காக்க வைக்கலாம்? நான் வரும்போது என்னுடன் வந்த பூனைக் குட்டிகளை கூண்டிலிருந்து வெளியேற்ற ஏன் யாரும் உதவவில்லை?' என்று ஆக்ரோஷத்துடன் பேசினார்.