போதைப் பொருள்கள் விவகாரம்: கங்கனாவை அழைக்காதது ஏன்? - நக்மா கேள்வி
மும்பை: போதைப் பொருள்கள் உட்கொண்டதாக கங்கனாவே ஒத்துக்கொண்டபோது அவரை விசாரணைக்கு அழைக்காதது ஏன் என நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணம் தொடர்பான வழக்கு தற்போது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் என இந்திய அரசின் முக்கிய துறைகள் விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் கங்கனா ரணாவத் பாலிவுட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
அதுமட்டுமல்லாது தானும் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருந்ததாகக் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கங்கனாவிற்கு இதுவரை சம்மன் அனுப்பாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”போதைப் பொருள்கள் எடுத்துக்கொண்டதாக கங்கனாவே ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இதுவரை விசாரணைக்கு அழைக்கவில்லை.
பாலிவுட்டின் மற்ற பிரபலங்களை இவர்கள் விசாரணைக்கு அழைக்கும்போது கங்கனாவை மட்டும் இவர்கள் அழைக்காதது நியாயமற்றது. பாலிவுட்டின் முன்னணி பிரபலங்களை அவதூறாக பேச வைக்கவே போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முயற்சி செய்வதாக தோன்றுகிறது.
அவர்களைக் குறித்து ஊடகங்களுக்கு செய்தி கொடுப்பதுதான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கடமையா? இது ஒரு தலைப்பட்சமாக உள்ளது. அதுமட்டுமல்லாது இது சட்ட விரோதம்” என்றார்.