ரியா சக்ரவர்த்தியின் பிணை மனு தொடர்பான மேல் முறையீடு பதிவு
மும்பை: சிறைக்காவலில் இருக்கும் ரியா சக்ரவர்த்தியின் பிணை மனு தொடர்பாக மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை (செப்.11) வழங்கப்பட உள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.08) கைது செய்தனர்.
கடந்த மூன்று நாள்களாக, அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி காணொலி அழைப்பு முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை ரியா சக்ரவர்த்தி சார்பில், பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அவரது பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்குப் போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சுஷாந்த் சிங்கிற்காக அவர் போதை மருந்துகளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே மூன்று நாட்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது காவலை நீட்டிக்க விரும்பவில்லை என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதையடுத்து, ரியாவை செப்டம்பர் 22ஆம் தேதி வரை, 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மும்பையிலுள்ள பைகுல்லா பெண்கள் சிறப்பு சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
நடிகை ரியாவின் பிணை குறித்து, அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிணை மனு பதிவு செய்யப்பட்டது. பின் ரியா சக்ரவர்த்தியின் பிணை மனு தொடர்பான தீர்ப்பு நாளை (செப்டம்பர் 11) வழங்கப்பட இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மரணம் குறித்து, அவரது தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று முகமைகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.
போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட எட்டு பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.