கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
திரையரங்குகளில் கிருமிநாசினி தெளித்து, திரையரங்குகளுக்குள் நுழையும் மக்கள் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு அறுவுறுத்தியுள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, காசியாபாத், குருகிராம் போன்ற இடங்களில் உள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் இயங்கும் வகையில், திரையரங்குகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கத்திற்கு வரும் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் உள்ளே நுழைபவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும். மேலும் குளிர்சாதன கருவி மக்களின் பாதுகாப்பிற்காக 24 டிகிரி முதல் 30 டிகிரி வரை இருக்கும் எனவும் திரையரங்குகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் முன்பு போன்று ஆர்வம் காட்டாததால் பல இக்கட்டான சவால்களை சந்தித்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை நிர்வகிக்க முன்பு இருந்ததைவிட தற்போது செலவினங்களில் 25 விழுக்காடு அதிகரிக்கும் என மல்டிபிளக்ஸ் திரையரங்கம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மிக முக்கியமான ஒன்று சுகாதாரம். ஒவ்வொரு காட்சி முடிவடைந்த பின்னரும் திரையரங்கை சுத்தப்படுத்துவதற்கே அதிக அளவு செலவாகிறது. தற்போதைய சூழலில் சுகாதாரம் மிகவும் அவசியம் என்பதால் இதற்கு நாங்கள் முன்பு இருந்ததை விட அதிகம் செலவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவம் கொடுக்கவும் சிறந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும் நாங்கள் அதிக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இப்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கவர்ந்து இழுப்பதற்காக நாங்கள் சில முன் பதிவுகளில் நூறு விழுக்காடுகள் வரை கேஷ்பேக் வழங்க உள்ளோம்.
அதேபோல் உறுப்பினர்கள் சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஒவ்வொரு காட்சி முடிவடைந்ததும் சுத்தப்படுத்துவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டும். அதன் பின்னரே அடுத்த திரையிடலுக்கு தயாராக வேண்டும்" என்று கூறினர்.