மும்பை: ஜுஹு பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் கட்டுமான தளம் அருகே சென்று கொண்டிருந்த நடிகை மெளனி ராய்கார் மீது பாறை ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
'நாகினி' டிவி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மெளனி ராய். டிவி தொடர்களிலிருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர், கடந்த ஆண்டு வெளியான 'கோல்டு' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த நிலையில், இவரது புதிய படமான 'மேட் இன் சைனா' புரொமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தனது காரில் சென்றுள்ளார் மெளனி ராய்.
ஜுஹு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான தளம் அருகே சென்றுகொண்டிருக்கையில் திடீரென எதிர்பாராதவிதமாக அவரது கார் மீது பாறை ஒன்று விழுந்துள்ளது. இதில் காரின் மேல் பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்த மெளனி ராய்க்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து, சேதமடைந்த தனது காரை விடியோவாக எடுத்து, மெட்ரோ நிர்வாகத்தினரை கண்டிக்கும் விதிமாக ட்வீட் செய்துள்ளார்.
இதில், ஜுஹு சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது 11 மாடி மெட்ரோ கட்டுமான தளத்திலிருந்து பாறை ஒன்று காரின் மீது விழுந்துள்ளது. என் காரில் விழுந்த பாறை இந்த வழியில் செல்லும் வேறு யார் மீதாவது விழுந்திருந்தால் என்னவாகுமென்று யோசிக்கிறேன். பொறுப்பற்ற மெட்ரோ நிர்வாகத்தினரை தண்டிக்க என்ன செய்யலாம்? என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், நாகினி நலம் குறித்து விசாரித்ததுடன், போலீஸிடம் புகார் அளிக்குமாறு ஆலோசனை வழங்கினர். மேலும், பிஎம்சி என்று அழைக்கப்படும் கிரேட்டர் மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விளக்குமாறு தெரிவித்தனர்.