தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து அங்கேயே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் தமிழில் '16 வயதினிலே', 'மூன்றம் பிறை', 'சிகப்பு ரோஜாக்கள்', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மூன்று முடிச்சு', 'புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மாம்'. இப்படி 300 படங்களுக்கும் மேல் நடித்த ஸ்ரீதேவி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தூபாயில் உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. இவரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று பாலிவுட்டின் இளம் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் தனது சமூகவலைதள பக்கத்தில், தினமும் உங்களை மிஸ் செய்கிறேன். என்று பதிவிட்டு தாய் ஸ்ரீதேவியிடன் ஜான்வி குழந்தை பருவமாக இருந்த கறுப்பு - வெள்ளை புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.