சென்னை: குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் திரைப்படங்களை தந்துவரும் இயக்குநர் ஆர்.கண்ணன். இவரது திரைப்படங்கள், சமூக கருத்துக்களோடு, அனைத்துவகை ரசிகர்களும், ரசித்து பார்க்கும்படி இருக்கும்.
இம்முறை இவர், தமிழ் சினிமா வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத இடத்தை பெற்ற, “காசேதான் கடவுளடா” என்ற படத்தை ரீமேக் செய்யவுள்ளார். தமிழின் க்ளாசிக் திரைப்படமான , “காசேதான் கடவுளடா” படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஆச்சி மனோரமா மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
தற்போது மீண்டும் உருவாகும், இப்படத்தின் ரீமேக் வடிவத்தில், முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், ஆச்சி மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசி அவர்களும் நடிக்கவுள்ளார்கள்.
நடிகர் கருணாகரன் உள்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படம் குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், “இந்தக் கோவிட் பெருந்தொற்று காலம், அனைவரது மனதிலும் பெரும் அழுத்தத்தை தந்திருக்கிறது.
திரைப்படங்கள் மட்டுமே அந்த அழுத்தத்தை போக்கும் மருந்தாக இருந்து வருகின்றன. இணைய OTT தளங்களில் சில படங்கள் வெளிவந்து, நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலனவை க்ரைம், ஹாரர் திரில்லர், மர்ம வகை படங்களாகவே இருக்கின்றன. இதனால் மக்களிடம், வயிறு குலுங்க சிரித்து மகிழும் படங்களுக்கான, ஏக்கம் தொடர்ந்து, இருந்து வருகிறது.
தமிழில் வெகுசில படங்களான “காதலிக்க நேரமில்லை, காசேதான் கடவுளடா” மற்றும் சில ரொமான்ஸ் காமெடி படங்கள் மட்டுமே காலம் கடந்து, எப்போது பார்த்தாலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மனதிற்கு நிறைவு தரும் படைப்புகளாக இருக்கின்றன.
அந்த வகையில் “காசேதான் கடவுளடா” திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கச்சிதமான படைப்பு. எனவே இப்படத்தின் மறு உருவாக்கத்திற்கான முறையான அனுமதியை பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளோம்.
மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் போன்ற அற்புத திறமை வாய்ந்த எங்கள் குழுவினர், இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து, “ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற குடும்பங்கள் கொண்டாடும் படம்போல் இப்படமும் அமையும்” என்றார்.
1972இல் வெளியாகி வெற்றி பெற்ற “காசேதான் கடவுளடா” படத்தை தற்போதைய மாடர்ன் உலகிற்கு ஏற்றபடி மாற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து கேட்டபோது, “உண்மையை சொல்லவேண்டும் என்றால் அப்படம் வெளியானபோதே, அப்போதைய காலத்தை தாண்டிய முதிர்ச்சி மிகுந்த படைப்பாகத்தான் இருந்தது.
எடுத்துக்காட்டாக அப்படத்தில், ATM அறிமுகம் ஆகாத அந்த காலத்தில், ஒரு காட்சியில், பூட்டை திறக்க 4 டிஜிட் கடவுஎண் தேவைப்படும்.
இப்படி காலத்தை விஞ்சிய படைப்பாகவே அப்படம் இருந்தது. ஆதலால் இப்படத்தை இப்போதைய காலகட்டத்திற்கு மாற்றுவதென்பது, அத்தனை கடினமான பணி ஒன்றும் இல்லை.
இதிலிருக்கும் மிகப்பெரிய சவால், மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்த அப்படத்திற்கு, நியாயம் செய்யும் வகையில், தற்போதைய படைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான்.
எங்கள் குழுவினர் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால் அதுதான் ஆனால் நாங்கள் மிக ஆவலுடன் அப்பணிகளை மேற்கொள்ள காத்திருக்கிறோம்” என்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற 15ஆம் தேதி தொடங்கி நடக்கவுள்ளது. படத்தினை மசாலா பிக்ஸ் நிறுவனம் எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
இதையும் படிங்க : ஒரே வாரத்தில் சிம்பு வீடியோ படைத்த சாதனை