ஆமிர் கான் நடிப்பில் உருவாகிவரும் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றுவந்தது. படத்தின் பல்வேறு காட்சிகள் பஞ்சாப்பில் நடைபெற, முக்கியமான சில காட்சிகள் லடாக்கில் நடைபெறவிருந்தன. இந்நிலையில் இந்திய-சீன எல்லைப் பிரச்னை காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அக்காட்சிகளை கார்கிலில் நடத்த படக்குழுவினர் முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.
கரோனா தொற்று பரவல் அதிகரித்ததற்கு முன்பாக 'லால் சிங் சத்தா' படப்பிடிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து கிறிஸ்மஸ் பண்டிகையின்போது படத்தை வெளியிட ஆமிர் கான் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்த பிற்பாடு வேறு ஏதேனும் பண்டிகையின்போது வெளியிடலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்துவருகின்றனர்.