முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினி, அவரது மகள் இஷா தியோல் இருவரும் நடித்து சமீபத்தில் வெளிவந்த கெண்ட் ஆர் ஓ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் விளம்பரப்படம் சமூக வலைதளங்களிலும், பல தரப்பட்ட மக்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்றது.
வீட்டு வேலை செய்யும் பெண்கள் கைகளால் மாவை பிசையும்போது கிருமிதொற்றுக்கு ஆளாகலாம் எனக் குறிப்பிட்டு, கைகளைத் தவிர்த்து தங்கள் நிறுவன இயந்திரத்தை உபயோகிக்கக் கோரி அந்த விளம்பரம் அமைந்திருந்தது,
வர்க்க வேறுபாட்டைத் தூக்கிப் பிடிக்கும் வகையிலும், பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த விளம்பரம் அமைந்திருந்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சங்களை இவ்விளம்பரம் பெற்றுவந்தது.
இதனையடுத்து கெண்ட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மகேஷ் குப்தா முன்னதாக வெளிப்படையாக மன்னிப்பு கோரி இருந்தார். தொடர்ந்து இவ்விளம்பரத்தின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.