மலையாளத்தில் 'மணிசித்திரத்தாலு', கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம், தமிழில் ரஜினி நடித்து 'சந்திரமுகி' என்ற பெயரில் வெளியாகி மாஸ் ஹிட்டானது. தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் 'பூல் புலையா' என்ற பெயரில் இத்திரைப்படம் ரீ மேக் செய்யப்பட்டது. இப்படத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். மற்ற மொழிகளைப் போலவே பாலிவுட்டிலும் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாகமான 'பூல் புலையா-2'வை அனீல் பாஸ்மி இயக்குகிறார். இதில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'பூல் புலையா 2' டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார், முராத் கெதானி, கிருஷ்ணன் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும், இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது படத்தின் நாயகன் கார்த்திக் ஆர்யன் கலந்து கொண்டுள்ளார். இதனை கார்த்திக் ஆர்யன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.