மும்பை: இந்திய சினிமாவின் அடையாளமாகவும், முதல் பெண் சூப்பர்ஸ்டார் நடிகையாகவும் திகழும் ஸ்ரீதேவி வாழ்க்கையை வைத்து ஸ்ரீதேவி - தி எதெர்னல் ஸ்கீரின் காடஸ் என்ற புத்தகத்தை, பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் வெளியிடவுள்ளனர்.
இந்தப் புத்தகம் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மும்பையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கரண் ஜோகரும் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தீபிகா படுகோனேவும் வெளியிடவுள்ளனர்.
எழுத்தாளர் சத்யார்த் நாயக் புத்தகம் குறித்து கூறியதாவது, "ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்த இந்தப் புத்தகத்தை மும்பையில் வைத்து கரண் ஜோகர் வெளியிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஏனென்றால் அவர் ஸ்ரீதேவி குறித்து பல்வேறு அரிய தகவல்களையும் நினைவுகளையும் பகிர்ந்தார். அவற்றையெல்லாம் தொகுத்து எழுத்து வடிவமாக மாற்றியுள்ளேன். எனவே இந்தப் பயணத்தில் அவரது பங்கு முக்கியத்துவமானது. புத்தக வெளியீட்டுக்கு ஒப்புக்கொண்டதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.