பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் வீட்டில் பணிபுரிந்துவந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து கரண் ஜோஹர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதை உங்களிடம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
அறிகுறிகள் தென்பட்டவுடன் எங்கள் கட்டடத்தின் ஒரு பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மும்பை மாநகராட்சிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் எங்கள் கட்டடத்தின் மீது கிருமிநாசினி தெளித்துச் சென்றார்கள்.
குடும்ப உறுப்பினர்களும் மீதமுள்ள ஊழியர்களும் எந்த அறிகுறிகளுமின்றி நலமுடன் உள்ளோம். நேற்று காலை எங்களுக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால் எங்களைச் சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக அடுத்த 14 நாள்களுக்கு நாங்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கவுள்ளோம். அலுவலர்கள் கண்டிப்புடன் கூறிய அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்வோம்.
தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிறந்த சிகிச்சையும் அரவணைப்பையும் வழங்குவதை நாங்கள் உறுதிசெய்வோம். அவர்கள் மீண்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்தக் கடினமான சூழலில் வீட்டுக்குள் இருந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தக் கரோனா வைரசை (தீநுண்மி) வெல்லலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வீட்டுக்குள் பாதுகாப்பாக இருப்போம்'' என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் வீட்டுப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரும் அவரது குடும்பத்தினரும் சுய தனிமையில் உள்ளனர்.
இதையும் படிங்க: பணியாளருக்கு கரோனா தொற்று: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட போனி கபூர்!