பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் 9ஆம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள் என 100 பேர் கலந்துகொண்டனர்.
லண்டனில் இருந்து வந்ததை யாரிடமும் கூறமால் கனிகா இருந்துள்ளார். மேலும் கரோனா வைரஸ் தொற்றை மறைத்து இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அவரை சமூகவலைதளத்தில் பலரும் திட்டி தீர்த்தனர். கனிகாவை கைது செய்ய வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் பலர் புகார் அளித்தனர்.
இதற்கிடையில் கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐந்து முறையும் கரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 6ஆவது முறையாக அவருக்கு கரோனா தொற்று மறைந்து குணமடைந்து உறுதியானது. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கரோனாவிலிருந்து மீண்டு வந்த கனிகா கபூர் தற்போது முதல் முறையாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் இது குறித்து வாய்திறந்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "லண்டன், மும்பை, லக்னோ என நான் தொடர்பில் இருந்த யாருக்கும் கரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி இல்லை. அவர்கள் அனைவருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்தது. லண்டனிலிருந்து மும்பை வந்தபோது விமான நிலையத்தில் எனக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அடுத்த நாள், நான் என் குடும்பத்தை பார்க்க லக்னோ சென்றேன். உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை. மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் நண்பர் ஒருவரின் உணவு விருந்தில் கலந்துகொண்டேன். நான் எந்த பார்ட்டியும் நடத்தவில்லை. அதோடு நான் பூரண உடல்நலத்துடனும் இருந்தேன்.
மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் எனக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. எனவே என்னை பிரிசோதனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.
பரிசோதனையில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். இறுதியில் நெகட்டிவ் வந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 21 நாள்களாக வீட்டில் இருக்கிறேன்.
என்னை நல்ல முறையில் கவனித்துக்கொண்ட மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எதிர்மறை விமர்சனங்களை ஒருவர் மீது வீசுவதால் உண்மையை மறைத்துவிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.