'தலைவி' கங்கனாவின் 'தேஜஸ்' பட அப்டேட்! - தேஜாஸ் பட அப்டேட்
மும்பை : தனது நடிப்பில் உருவாகவுள்ள ’தேஜஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் மிக முக்கிய போர் விமானமாகக் கருதப்படும் தேஜஸ், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியால் (ADA) வடிவமைக்கப்பட்டது. இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம்தான் தேஜஸ்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு விமானப்படையில் போர் விமானங்களை இயக்குவதற்கு பெண் விமானிகள் அனுமதிக்கப்பட்டதை மையமாக வைத்து, சர்வேஷ் மேவரா இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் 'தேஜஸ்' திரைப்படம் உருவாகவுள்ளது.
இது குறித்து கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், ”தேஜஸ் டிசம்பர் மாதம் புறப்படத் தயாராக உள்ளது. துணிச்சலான விமானப்படையின், பெண் விமானி கதாபாத்திரத்தில் நான் நடிக்கவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதை பெருமையாக உணர்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.