பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். அண்மையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளைப் பகிர்ந்துவருவதாகக் கூறி கங்கனா மீதும் அவரது தங்கை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தான் தொடர்ச்சியாக பல இன்னல்களைச் சந்தித்துவருவதாக கங்கனா தான் வெளியிட்ட காணொலி பதிவில் தெரிவித்தார். மேலும் நாம் அனைவரும் பழங்காலத்தை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டார்.
"நம் நாட்டிற்காக நான் குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து நான் எப்படி சித்திரவதைச் செய்யப்படுகிறேன் என நாடே அறியும். எனது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு நான் ஆதரவாகப் பேசியதைத் தொடர்ந்து என் மீது புதிய வழக்குகள் தொடரப்பட்டுவருகின்றன.
நான் சிரித்தால்கூட ஒரு வழக்கு பதியப்படுகிறது. தொற்று பரவிய ஆரம்பத்தில் மருத்துவர்கள் படும் சித்திரவதைக்கு எதிராக எனது சகோதரி ரங்கோலி போராடினார். அவருக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டது. அதில் எனது பெயரையும் இழுத்துவிட்டார்கள். அந்தச் சமயத்தில் நான் ட்விட்டரில்கூட இல்லை. நம் மரியாதைக்குரிய நீதிபதி அதை மறுத்துவிட்டார்.
காவல் நிலையத்தில் வருகைப்பதிவு செய்ய எனக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றத்திடம் ஒன்று கேட்க நினைக்கிறேன். பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்ட, அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்ட அந்தப் பழங்காலத்திற்கு நாம் சென்றுவிட்டோமா?
இந்தச் சூழ்நிலையைக் கண்டு சிரிப்பவர்களிடம் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் ஒடுக்கப்பட்டபோது சிந்திய ரத்தக் கண்ணீர், இதுபோன்ற தேசியவாதிகள் குரல்கள் அடக்கப்படும்போது மீண்டும் சிந்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... பாலிவுட்டில் ஹீரோவுடன் தனிமையில் இருந்தால் தான் 2 நிமிட ரோல்... கொந்தளித்த கங்கனா