தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க பல்வேறு மாநில அரசுகள் தடைவிதித்தது. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
அந்த வகையில் கர்நாடகவில் உள்ள காவல்துறை அலுவலர் ரூபா தனது சமூக வலைதளப்பக்கத்தில், பட்டாசு வெடிப்பது இந்து மத வழக்கம் கிடையாது. இதைச் சொல்வதால் இந்து மதத்தை நான் தாக்கிப் பேசுவதாகச் சிலர் கூறுவார்கள். புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசு வெடிப்பது பற்றி எந்தப் பதிவும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஐரோப்பியர்கள் மூலமாகத்தான் இந்தியாவுக்கு பட்டாசு அறிமுகமானது என்று தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
ரூபாவின் இந்தக் கருத்துக்கு ட்ரூ இந்தாலஜி என்ற ட்விட்டர் பக்கம் பதிலளித்தது. இந்தப் பதிவை பலரும் பதிவிட்டுவந்த நிலையில், ட்ரூ இந்தாலஜி பக்கம் முடக்கப்பட்டது. ரூபா கொடுத்த அழுத்தத்தாலேயே அந்தப் பக்கம் முடக்கப்பட்டதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர்.