மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இதில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், கலைஞர் கருணாநிதியாக பிரகாஷ் ராஜூம் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் இறுதிகட்டப்பணிகள் தற்போது வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையை கூட்டினார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் பழைய உடல்எடைக்கு திரும்பும் முயற்சியில் கங்கனா ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து கங்கனா தனது சமூகவலைதளப்பக்கத்தில், "இந்திய சினிமாவில் நான் முதன் முறையாக சூப்பர் பெண்மணியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்திற்காக நான் 30 வயதில் 20 கிலோ எடை கூடவேண்டியிருந்தது. இதனால் என் முதுகு சற்று சேதமானது. இருப்பினும் நான் அதை பெருட்படுத்தவில்லை. ஒரு கதாபாத்திரத்தை ழுழுமையாக அனுபவிக்கும் எனக்கு இது பெரிதாக தெரியவில்லை.
இப்போது மீண்டும் எனது பழைய உடல்நிலைக்கு திரும்புவது எளிதானது அல்ல. இயக்ககுநர் விஜய் என்னை தலைவி படத்தில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.