நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப்பின் சமூக வலைதளத்தில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் வாரிசு பிரபலங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் சென்று திட்டித் தீர்த்துவருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகின்றன.
சுஷாந்தின் தற்கொலையை தொடர்ந்து, பாலிவுட்டில் வாரிசு பிரபலங்கள் குறித்தும் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் கங்கனா ரனாவத் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். தற்போது பாலிவுட்டில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக புதிய குற்றச்சாட்டை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது, "பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன் தான். கிட்டத்தட்ட அனைத்து ஹவுஸ் பார்ட்டிகளிலும் இது தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. இது விலை உயர்ந்த போதைப் பொருள் தான். ஆனால் பெரிய நடிகர்களின் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளுக்கு சென்றால் உங்களுக்கு தொடக்கத்திலேயே இது இலவசமாக வழங்கப்படும். எம்.டி.எம்.ஏ படிகங்கள் தண்ணீரில் கலக்கப்பட்டு, சில நேரம் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுக்கு கொடுப்பார்கள்.
போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும். இதனால் என் தொழிலுக்கும் உயிருக்கும் கூட ஆபத்து வரலாம். சுஷாந்துக்கு சில உண்மைகள் தெரிந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினர், பாலிவுட்டுக்குள் முன்னணி பிரபலங்கள் பலர் சிறைக்கு செல்வார்கள். பாலிவுட் என்ற சாக்கடையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மோடி சுத்தம் செய்வார் என நம்புகிறேன்.
கங்கனாவின் இந்த புதிய குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.