கரோனா ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து நடிகை கங்கனா ரணாவத் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அங்கிருந்தபடியே, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி, பாலிவுட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு, வாரிசு அரசியல், பாலிவுட்டில் நிழல் உலக தாதாக்களின் செயல்பாடுகள், மும்பை மற்றும் அதன் காவல் துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்.
கடந்த சில நாட்களாகவே மும்பை குறித்தும் அந்நகர காவல் துறையினர் குறித்தும் கங்கனா கூறிவந்த கருத்துக்களுக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது கங்கனா மும்பைக்கு வர வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக தான் மும்பை வருவதாக கங்கனா அறிவித்திருந்தார். அதன்படி, அவர் மும்பை விமான நிலையத்திற்கு இன்று (செப்.09) வந்தடைந்தார்.