’நான் மும்பைக்கு வருவேன், முடிஞ்சா தடுத்துப் பார்’ - சவால்விடும் கங்கனா ரனாவத்
மும்பை : எம்.என்.எஸ் சித்ரபத் சேனா தலைவர் அமேயா கோப்கர் கங்கனா ரனாவத்திற்கு தற்போது மனநல சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
'பாலிவுட் குயின்' கங்கனா ரனாவத் தற்போது தனது சொந்த ஊரான மணாலியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கிருந்தவாறே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி, பாலிவுட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு, வாரிசு அரசியல், பாலிவுட்டில் நிழல் உலக தாதாக்களின் செயல்பாடுகள் என பல்வேறு தகவல்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வருகிறார்.
மேலும், மும்பை காவல் துறையினரால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், நான் மும்பை வரக் கூடாது என வெளிப்படையாக மிரட்டி உள்ளதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். மேலும், இதையெல்லாம் பார்க்கும்போது மும்பை தற்போது 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' போலத் தோன்றுகிறது என்றும் ட்விட் செய்திருந்தார்.
இந்நிலையில், ”தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக மும்பை காவல் துறையினரையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் கங்கனா அவமானப்படுத்தி விட்டார் அவ்வளவு பயம் இருப்பவர் மும்பைக்கு திரும்ப வேண்டாம்” எனக் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாது கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மும்பை உள்துறை அமைச்சரையும் அவர் தனது பதிவில் டேக் செய்திருந்தார்.
அவரது இந்த ட்வீட்க்கு தற்போது பதிலளித்துள்ள கங்கனா, ”மும்பைக்கு நான் திரும்ப வர வேண்டாம் என பலரும் அச்சுறுத்துகின்றனர். எனவே செப்டம்பர் 9ஆம் தேதி நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்திற்கு நான் வந்தடையும் நேரத்தை பதிவிடுகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், எம்.என்.எஸ் சித்ரபத் சேனா தலைவர் அமேயா கோப்கர் கங்கனா ரனாவத்திற்கு தற்போது மனநல சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது மும்பை காவல்துறையினரை அவமதித்தற்காக அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு அவரை கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.