மலையாளத்தில் இயக்குநர் சச்சி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'அய்யப்பனும் கோஷியும்'. முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருந்தது, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இப்படத்தில் இடம் பெற்ற 'கலக்காத்தா சந்தனம் மேரா வெகு வேகா பூத்திருக்கு, பூப்பறிக்க போகிலாமோ' பாடல் கேரளாவைத் தாண்டி பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இப்பாடலை பழங்குடி இனத்தைச் சேர்ந்த நஞ்சம்மாள் பாட்டி பாடியிருந்தார்.
தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ளார். இந்தப் படத்தை ஜே.ஏ. என்டர்டெயின்மென்ட் எனும் ஜான் ஆபிரகாமின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இதுகுறித்து ஜான் ஆபிரகாம் தனது ட்விட்டர் பக்கத்தில், ' 'அய்யப்பனும் கோஷியும்' ஆக்ஷனும் த்ரில்லரும் கலந்த நல்ல கதை அம்சம் கொண்டிருந்தது. ஜே.ஏ. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இதுபோன்ற நல்ல கதைகளை நம் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆர்வமாக உள்ளோம். இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்வதன் மூலம் பார்வையாளர்களை ஈர்ப்போம் என நம்புகிறோம். உண்மையில் மிக உற்சாகமாக இருக்கிறது' என ட்வீட் செய்துள்ளார்.
'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி தான். ஆனால் உலகம் முழுவதும் இத்திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார். தமிழில் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமாரும் ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் தெலுங்கு ரீமேக் உரிமையை 'ஜெர்சி’ படத் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி பெற்றுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சசிகுமார்?