தமிழில் வெளிவந்த ஆரண்ய காண்டம் படத்தில் சிங்கப்பெருமாளாகவும் பிகில் படத்தில் ஜே.கே சர்மாவாகவும் வந்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஜாக்கி ஷெராஃப். அப்பாவும் மகனுமான ஜாக்கி ஷெராஃப் மற்றும் டைகர் ஷெராஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் பல காலமாக பாலிவுட்டில் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அதற்கான சரியான நேரம் தற்போது அமைந்துள்ளது.
இந்தியில் சூப்பர் ஹிட்டான 'பாகி' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் 'பாகி 3' படத்தில் இருவரும் நடித்துவருகின்றனர். ஷ்ரதா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்ற இப்படத்தை அகமது கான் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. ஜாக்கி ஷெராஃப் இப்படத்தில் டைகர் ஷெராஃப்புக்கு தந்தையாக நடிக்கிறார்.