குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அனுராக்குடனான நட்பை முறித்துக் கொள்வேன் - டாப்சி
மும்பை: அனுராக் காஷ்யப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என நடிகை டாப்சி கூறியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், சமீபகாலமாக சமூக வலைதளமான ட்விட்டரில் வார்த்தைப் போரில் சிக்கியுள்ளார். கங்கனா ரணாவத், ரன்வீர் ஷோரி என அடுத்தடுத்த பிரபலங்கள் அனுராக்கை வசைபாடினர்.
தற்போது நடிகை பயால் கோஷ், அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதனால் பாலிவுட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்து அவரது முன்னாள் மனைவிகள் ஆர்த்தி பஜாஜ், நடிகை கல்கி கோச்லின், நடிகைகள் டாப்ஸி, ராதிகா ஆப்தே, மஹி கில், ஹுமா குரேஷி, டிஸ்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை டாப்ஸி மீண்டும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டாப்ஸி கூறியிருப்பதாவது, "அனுராக் மூலம் யாராவது துன்புறுத்தப்பட்டிருந்தால் அவர்கள் முறையான விசாரணையை அணுக வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். உண்மையில் அனுராக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருடனான அனைத்து உறவுகளையும் முறித்த முதல் நபராக நானாக தான் இருப்பேன்.
மீடூ இயக்கம் ஒருபோதும் தவறான செயலுக்குத் துணைபோனதில்லை. இதுபோன்ற பரபரப்பு குற்றச்சாட்டால் இயக்கத்தின் புனிதத் தன்மை பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
டாப்ஸி, அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் உருவாக உள்ள த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். முன்னதாக அவர் 2018ஆம் ஆண்டு அனுராக் இயக்கத்தில் வெளியான 'மன்மார்சியன்' என்ற பாலிவுட் நகைச்சுவை படத்தில் நடித்திருந்தார்.