நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேள்' (GUNJAN SAXENA). 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போர் மண்டலத்திற்குள் நுழைந்த முதல் இந்தியப் பெண் விமானியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
கார்கில் போரில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் பலரை பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் சக்சேனா காப்பற்றினார். அவரின் செயலைப் பாராட்டும் விதமாக, அவருக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அதன்பின் அவரை ’கார்கில் கேர்ள்’ என்ற செல்லப் பெயருடன் பலரும் அழைக்க ஆரம்பித்தனர்.
இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, ஷரன் சர்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில் பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் நேற்று (ஆக. 12) வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் வரும் சில காட்சிகளும் வசனங்களும் இந்திய விமானப்படைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தர்மா புரொடக்ஷன்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகியோருக்கு இந்திய விமானப்படை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், ”இந்திய விமானப்படை குறித்த நம்பகத்தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்தவும், அடுத்த தலைமுறை அலுவலர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் படம் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தர்மா புரொடக்ஷன்ஸ் தெரிவித்திருந்தது.
ஆனால் முன்னாள் விமானப்படை அலுவலர் குஞ்சன் சக்சேனாவை பெருமைப்படுத்தும் நோக்கில், தர்மா புரொடக்ஷன்ஸ், சில காட்சிகளில் இந்திய விமானப்படை பணிச் சூழல் குறித்து, குறிப்பாக விமானப் படையில் உள்ள பெண்கள் குறித்தும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளது. இந்திய விமானப்படை எப்போதும் பாலின பேதமின்றி ஆண் - பெண் அலுவலர்களுக்கு சம உரிமை வழங்கி வருகிறது.
சர்ச்சைக்குரிய இக்காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. எனினும் தயாரிப்பு நிறுவனம் அதுபோன்ற எந்தக் காட்சிகளையும் நீக்காமல் திரைப்படத்திற்கு முன்னால் மறுப்பு செய்தி ஒன்றை மட்டும் சேர்த்துள்ளது. இது இந்திய விமானப்படையை கலங்கப்படுத்தும் நோக்கில் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.