விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில், இயக்குநர் அனுராக் காஷ்யப் - அனில் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏகே வெர்சஸ் ஏகே'.
இந்த படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 7ஆம் தேதி வெளியானது. இவர்களுடன் சோனம் கபூர் நடித்துள்ளார். கடுமையான இயக்குநர் ஒருவர் நடிகர் ஒருவரின் மகளை கடத்தியதால் என்ன நடக்கிறது என்பதே இதன் கதை. இந்த படம் டிசம்பர் 24ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சமீபத்தில் இந்த படத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அனுராக் காஷ்யப் - அனில் கபூர் இருவரும் சமூகவலைதளத்தில் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து பதிவிட ஆரம்பித்தனர்.
பாலிவுட்டில் பிரபலங்கள் இவ்வாறு செய்வது பொதுவான ஒன்றே என்றாலும் இவர்கள் இருவரும் ஏன் இப்போது இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றனர் என்று நெட்டிசன்கள் யோசித்து கொண்டிருக்கையில், படத்தின் விளம்பரத்திற்காக இந்த ஜாலி உரையாடல் என பின்னரே தெரியவந்தது.
தற்போது இந்த படத்தில் தங்களது சீருடையை தவறாக சித்தரிப்பதாக இந்திய விமானப்படை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியவிமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், " ஐ.ஏ.எஃப் சீருடை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீருடையில் இவர்கள் பேசும் மொழி அருவருப்பானது. மேலும் இது விமானப்படையின் நெறிமுறைகளுக்கு உள்பட்டது இல்லை. எனவே இந்த காட்சியை நீக்கவேண்டும்" என படக்குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளது.