டெல்லி: ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், பியானோ இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொண்டு அதை இசைக்கும் சிறிய காணொலியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
"ஊரடங்கு அமலுக்கு வந்து ஏழாவது நாள் ஆகியுள்ள நிலையில், இந்த நேரத்தை அனைவரும் ஏதாவது ஒன்றை கற்று பயனுள்ளதாகச் செலவழித்து வருகிறீர்கள்" என்று நம்புவதாகத் தெரிவித்துள்ள ஹிருத்திக் ரோஷன், 21 நாள்கள் பியானோவில் இசைக்க கற்றுக்கொண்டதை அந்த இசைக்கருவியில் வாசித்து காண்பித்துள்ளார்.
வாசிப்புக்குப் பின் பேசிய அவர், "எனக்கு ஒரே கையில் இரண்டு கட்டை விரல்கள் இருப்பதால் அவ்வளவு சிறப்பாக வாசிக்க முடியவில்லை. கொஞ்சம் அசெளகரியமாக உணர்கிறேன். இருந்தபோதிலும் நான் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கி முயற்சி செய்துள்ளேன். நீங்களும் தொடர்ந்து விரும்பியதைக் கற்றுக்கொள்ளுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.