அன்பு மனைவி ஜெனிலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரித்தீஷ் தேஷ்முக் - ஜெனிலியாவின் திரைப்படங்கள்
மும்பை: நடிகை ஜெனிலியாவின் பிறந்தநாளுக்கு அவரது கணவரும், நடிகருமான ரித்தீஷ் தேஷ்முக் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், பிரபல பாலிவுட் நடிகருமான ரித்தீஷ் தேஷ்முக்கை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ரியான், ரேய்ல் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்குப் பின் சினிமா துறையிலிருந்து விலகிய ஜெனிலியா, அவ்வப்போது தனது கணவருடன் சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் கூட தன் கணவருடன் இணைந்து உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 5) தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் ஜெனிலியாவை வாழ்த்தும் விதமாக கணவர் ரித்தீஷ் தேஷ்முக் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெனிலியாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன், ”என்னுடைய சிறந்த நண்பர், என் சிரிப்பு, க்ரைம் பார்ட்னர், என் மகிழ்ச்சி, என் வழிகாட்டி, என் ஒளி, உற்சாகம், என் வாழ்க்கை, என் உலகம் என எனக்கு எல்லாமும் ஆன என் அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.