ஹைதராபாத்: தமிழ், இந்தி, தெலுங்கு என சினிமாவில் பிஸியாக வலம்வருபவர் நடிகர் சோனு சூட். இவர் 1973ஆம் ஆண்டு இதே தினத்தில் பஞ்சாப்பின் மோகா பகுதியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.
தனது ஆரம்ப கல்வியை மோகா திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சோனு, நாக்பூர் யஷ்வந்த்ரா சவான் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் 1999ஆம் ஆண்டு புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தில் நடித்தார்.
இந்தப் படத்தில் சௌமியா நாராயணன் என்ற பிராமண கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்து விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் கேங்ஸ்டர் ஆக மிரட்டினார்.
பின்னர் (2000) ஹேண்ட்ஸ் அப் (தெலுங்கு) என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து நவரச நாயகன் கார்த்திக் இரட்டை வேடங்களில் நடித்த சந்தித்த வேளை படத்திலும், மஜ்னு படத்தில் நடித்தார்.
இவரின் கேரியரில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது ஷாகீர்-இ-அஸம். இந்தப் படத்தில் பகத் சிங் என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார். அடுத்து இவருக்கு தொடர்ச்சியாக இந்தியில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இதற்கிடையில் 2002இல் அஜித் குமார் நடித்த ராஜா படத்தில் பவானி என்ற கேரக்டரில் நடித்தார். பின்னர் தமிழ், தெலுங்கு என தொடர்ச்சியாக படங்களை ஒப்புக்கொண்டார். கோவில்பட்டி வீரலட்சுமிக்கு பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை சோனு சூட் சில காலங்கள் நிறுத்திக்கொண்டார்.
தந்தை பயணித்த இருசக்கர வாகனத்தில் ஒரு பயணம்.. அந்நேரங்களில் இந்தி படங்களில் பிஸியாக நடித்துவந்தார். இந்த பிரேக்கெல்லாம் உடைக்கும் வகையாக சந்திரமுகி படம் அவருக்கு அமைந்தது. அந்தப் படத்தில் ஊமையன் என்ற கேரக்டரில் தோன்றிய சோனு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் செய்யும் சண்டை காட்சி மிரட்டலாக அமைந்திருந்தது.
சோனு சூட், தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் தவிர ஆங்கில மொழி படம் ஒன்றிலும் நடித்துள்ளார். சிட்டி ஆஃப் லைன் என்ற அந்தப் படம் 2009ஆம் ஆண்டு வெளியானது. சந்திரமுகிக்கு பிறகு ஒஸ்தி, மதகஜராஜா, சாகசம், தேவி, தேவி பாகம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
ரசிகர்கள் கொண்டாடும் சோனு சூட் இதுமட்டுமின்றி தமிழரசன் என்ற தமிழ் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். சோனு சூட் தனது மனிதாபிமான உதவிகளால் பெரிதும் அறியப்படுகிறார். கரோனா நெருக்கடி காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இவர் செய்த உதவிகள் பலராலும் பாராட்டப்பட்டன.
சோனு சூட் 1996ஆம் ஆண்டு சோனாலி என்ற தெலுங்கு பெண்ணை மணந்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு ஆயன், இஷாந்த் என இரு மகன்கள் உள்ளனர். சோனு சூட் தனது நடிப்பிற்காக பல மாநிலங்களிலும் விருது வாங்கியுள்ளார்.
ஆந்திர அரசின் நந்தி விருதும் இவருக்கும் கிடைத்துள்ளது. அருந்ததி படத்தில் சோனு சூட்டின் வில்லன் நடிப்பு பல தரப்பட்ட மக்களாலும் பாராட்டப்பட்டது. இவருக்கு சிறந்த வில்லன் மற்றும் துணை நடிகர் விருதுகளும் வழங்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 1,200 கி.மீ. பயணம்...ரசிகருக்கு காலணியை பரிசாக கொடுத்த சோனு சூட்