மும்பை: ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் தன்பாலின ஈர்ப்பு பற்றிய கதையம்சத்தில் உருவாகியிருக்கும் 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' படம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல மனித உரிமை பரப்புரையாளரும், LGBTQ+ (மாற்று பாலின ஈர்ப்பு, இருபாலின ஈர்ப்பு, திருநங்கைகள்) போராளியுமான பீட்டர் டாட்செல் தனது சமூக வலைதள பக்கத்தில், ஆயுஷ்மான் குர்ரானா நடித்து வெளியாகியிருக்கும் 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' பற்றி பதிவிட்டிருந்தார்.
அதில், தன்பாலின ஈர்ப்பு பற்றி புறக்கணித்து பேசிவரும் பழமைவாதிகளை வெல்லும்விதமாக இந்தியாவில் தற்போது வெளியாகியிருக்கும் தன்பாலின ஈர்ப்பு குறித்த புதிய ரொமாண்டிக் காமெடி படம் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அவரது அந்தப் பதிவை ரீ-ட்விட் செய்து, 'நன்று' என்று ஒற்றை வார்த்தையில் சுருக்கமாக ரியாக்ட் செய்து ட்விட் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ட்ரம்ப்பின் இந்த ட்விட் பதிவு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டிருப்பதுடன், சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோரால் ரீ-ட்விட் செய்யப்பட்டிருக்கிறது.
ஆயுஷ்மான் குர்ரானா, ஜித்தேந்திர குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படம் இரு ஆண்களுக்கு இடையேயான காதலை மையப்படுத்தி படத்தின் கதை அமைந்துள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் ஹித்தேஷ் கெவல்யா இயக்கியுள்ளார்.
'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது பல்வேறுவிதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில், படம் குறித்து சமூக வலைதளங்களில் பெரியளவில் விவாதங்களும் நடைபெற்றன. இதையடுத்து படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களும், கருத்துகளும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.
தன்பாலின ஈர்ப்பு குறித்த கதையாக இருப்பதால் இந்தப் படம் துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியிட தடைசெய்யப்பட்டது. படத்தில் ஆயுஷ்மான் - ஜித்தேந்ரா ஆகியோருக்கு இடையேயான முத்தக் காட்சியை நீக்கி வெளியிட படத் தயாரிப்பாளர்கள் முன்வந்தபோதும் அதற்குப் பயன் இல்லாமல்போய்விட்டதாக அங்குள்ள ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இந்தியில் வெளியாகியிருக்கும் முதல் தன் பாலின ஈர்ப்பு படம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது நேர்மறை கருத்தை தெரிவித்திருப்பது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:தன்பாலின ஈர்ப்பு படங்களை ஏற்க தேசம் தயாராகிவிட்டது - ஆயஷ்மான் குர்ரானா