தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கதை திருட்டு: பாலா படத்தை தடை செய்யக்கோரும் இளம் இயக்குநர் - கதை திருட்டு விவகாரம்

கோலிவுட் சினிமாக்களைப் போல் பாலிவுட்டில் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவிருக்கும் பாலா திரைப்படம் எனது சொந்த வாழ்க்கையின் கதை எனவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்று இளம் இயக்குநர் கமல் காந்த் சந்த்ரா என்பவர் கோரியுள்ளார்.

பாலா திரைப்படம்

By

Published : Nov 5, 2019, 10:05 AM IST

Updated : Nov 5, 2019, 10:17 AM IST

டெல்லி: ரிலீசுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளை அடுத்தடுத்து சந்தித்துவரும் பாலா திரைப்படம், தற்போது புதிய பிரச்னையில் சிக்கியுள்ளது.

முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களில் கதைகளுக்கு உரிமை கொண்டாடி வழக்குகள் தொடரப்பட்டு, பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அந்தப் படங்கள் ரிலீசாகும் வழக்கம் கோலிவுட்டில் அதிகமாக நிகழ்ந்துவருகிறது. இதேபோல் தற்போது பாலிவுட்டிலும் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடிகை யாமி கெளதம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பாலா. இளம் வயதிலேயே வழுக்கை விழுந்த இளைஞன் அதனால் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்ளும் விதத்தை நகைச்சுவை கலந்துசொல்கிறது இந்தப் படம். இதையடுத்து படத்தின் ட்ரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதேசமயம் படம் மீது பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பின. கடந்த 1ஆம் தேதி வெளியான உஜ்ட சாமன் என்ற இந்திப் படத்தின் கதையும் பாலா படத்தின் கதையும் ஒரே சாயலில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, தனது குறும்படத்தின் கதையை திருடி பாலா படம் எடுக்கப்பட்டிருப்பதாக நமன் கோயல் என்பவர் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பாலா திரைப்படம் போஸ்டர்

இதையடுத்து தற்போது கமல் காந்த் சந்த்ரா என்பவர் படத்துக்கு நிரந்தர தடைகோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து கதை தயார் செய்து 2017ஆம் ஆண்டு நடிகர் ஆயுஷ்மான் குரானாவை அணுகினேன். அவரிடம் இளம் வயதிலேயே வழுக்கை விழுந்த இளைஞன் படும் கஷ்டங்களை வைத்து கதை கூறினேன். அப்போது அவர் பரேலி கி பஃர்பி படத்தின் பணிகளில் பிஸியாக இருந்தார்.

இருப்பினும் ஓராண்டு காலம்வரை அவரைப் பின்தொடர்ந்தேன். பின்னர் அவரது மேலாளர் என்னைத் தொடர்புகொண்டு இந்தக் கதையில் நடிக்க ஆயுஷ்மான் குரானாவுக்கு தற்போது விருப்பமில்லை எனத் தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா இளம் வயதிலேயே வழுக்கை விழுந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நான், ஆயுஷ்மான் குரானா, படத்தயாரிப்பாளரான தினேஷ் விஜயன் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.

வழக்கின் விசாரணை ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் படத்தின் ஷுட்டிங்கும் நடைபெற்றது. பின்னர் மீண்டும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். நவம்பர் 4ஆம் தேதி வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், பாலா படத்தின் ரிலீசுக்கு முன்னர் இந்த வழக்கின் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த வகையில், பாலா படத்துக்கு நிரந்தரத் தடை கோரியுள்ளேன். ஏனென்றால் அந்தப் படத்தின் கதை எனது நிஜ வாழ்க்கையில் நடைபெற்றது. மேலும், மகேஷ் பட் நடிப்பில் மார்க்‌ஷீட் என்ற பெயரில் இந்தக் கதையை படமாக்கிவருகிறேன்" என்று கூறினார்.

Last Updated : Nov 5, 2019, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details