தனக்கான மார்கெட்டை இழக்காமல் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன். முன்னதாக, கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து அமித் மசூர்கர் இயக்கும் 'ஷெர்னி' எனும் புதிய படத்தில் வித்யாபாலன் தற்போது நடிக்க உள்ளார். ஆஷ்தா டிகு திரைக்கதை எழுதும் இப்படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார், அமித் மசூர்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படம் குறித்து சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வித்யாபாலன், நான் என்னை ஒரு கிளர்ச்சியாளராகப் பார்க்கவில்லை. மக்களால் எதிர்பார்க்கப்படுவதை எதிர்த்து நாம் ஒன்று செய்தால் அவர்கள் நம்மை கிளர்ச்சியாளர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நான் என் மனக் குரலை பின்பற்றத் தொடங்கினேன். அது மிகவும் எளிதான ஒன்று அல்ல. எனக்கு இது சரியான செயல் என்று தோன்றும்போது என் மனக் குரல் அதை எதிர்த்து நிற்கும். நான் செய்ய விரும்புவதையே செய்து வருகிறேன். நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு முடிவும் என் தனிப்பட்ட முடிவு. அதை நான் யாரிடமும் விவாதிக்க மாட்டேன். முடிவெடுக்கும் நேரத்தில் நான் எப்போதும் என்னைச் சார்ந்து இருக்கிறேன்.