மும்பை:இந்திய விவாசாயிகள் போராட்டம் குறித்து பேச வேண்டும் என்ற தனது ட்வீட் மூலம் வலியுறுத்திய ஹாலிவுட் பாடகி ரிஹானாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஞ் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரிரி என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் 2.16 நிமிடங்கள் உள்ளன. இந்த பாடலை தோசன்ஞ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடல் வரிகளை ராஜ் ரன்ஜோத் எழுத, பிரபல இசையமைப்பாளர் இன்டென்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலை தனது ட்விட்டரிலும் பகிர்ந்துள்ள பாடகர் தில்ஜித் அதன் வரிகளுக்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளார். அதில், "பூமிக்கு இந்த தேவதையை அனுப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. அவருக்கு பாட்டியாலா ஆடையும், கனமான ஜோடி கொலுசையும் பரிசாக அளிக்க வேண்டும். பஞ்சாபியர்கள் அனைவரும் உங்கள் ரசிகர்கள். உங்களது ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டு பொறாமை அடைகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.