மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு 'தில் பேச்சாரா' படக்குழுவினர் இசை அஞ்சலி!! - தில் பேச்சாரா ட்ரெய்லர்
டெல்லி: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்பட 'தில் பேச்சாரா' குழுவினர் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. சுஷாந்த் சிங்கின் மறைவையொட்டி இத்திரைப்படத்தை ஹாட் ஸ்டார் தளத்தில், இலவசமாகக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் உள்பட படக்குழுவினர் இசை அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலியில், ஸ்ரேயா கோஷல், சுனிதி சவுகான், அரிஜித் சிங், மோஹித் சவுகான், ஜோனிதா காந்தி உட்பட பல கலைஞர்கள் பாடிய 9 பாடல்கள் இடம்பெற்றன. இப்பாடலை இவர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அர்ப்பணித்தனர்.
இந்த இசை அஞ்சலி குறித்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ட்விட்டர் பக்கத்தில், எங்கள் அன்புக்குரிய சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஒரு இசை அஞ்சலி என்று பதிவிட்டிருந்தனர்.
முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 'தில் பேச்சாரா' இசை நாம் அனைவருக்கும் எப்போதும் விசேஷமான ஒன்றாக இருக்கும். இப்படத்தில் அமைந்திருக்கும் ஒன்பது பாடல்களும் ஒரு புதிய வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.