பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலர் தாங்கள் கலந்துகொண்ட விருந்துகளில் போதைப் பொருள்களை உபயோகித்ததாக வந்த அதிர்ச்சித் தகவலை அடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவான என்சிபி வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட் பிரமுகர்கள் பலரை விசாரித்தும் கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஷ்ரதா கபூர், சாரா அலி கான், தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்சிபி அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறது.
இந்த விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி கோவாவில் இருந்து மும்பைக்கு தீபிகா திரும்பினார்.
இயக்குநர் ஷாகுன் பாத்ரா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் தீபிகா தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. தற்போது விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் கோவா சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் தீபிகா.
தீபிகா படுகோனே, ’நடிகையர் திலகம்’ திரைப்படப் புகழ் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள அறிவியல் புனைவு (sci-fi) படத்திலும் நடிக்க உள்ளார். தவிர, தீபிகா தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்த ‘83’ திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.