மும்பை: உலக அளவில் புகழ்பெற்ற ஃபேஷன் நிறுவனத்தின் சர்வதேச பரப்புரையில் முதல் இந்திய நடிகையாக இடம்பிடித்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள 'லூயில் உய்ட்டன்' என்ற ஃபேஷன் நிறுவனம் சர்வதேச அளவில் பரப்புரை ஒன்றை மேற்கொள்கிறது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து பிரபலங்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா சார்பில் தீபிகா படுகோனே இணைந்துள்ளார்.
தீபிகாவுடன் சர்வதேச பிரபலங்களான எம்மா ராபர்ட்ஸ், சோஃபி டர்னர், க்ளோயி கிரேஸ் மோரட்ஸ் உள்ளிட்டோரும் இந்த பரப்புரையில் இடம்பிடித்துள்ளனர்.
இதுபற்றி தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:
லூயில் உய்ட்டன் குடும்பத்தில் இணைந்திருப்பது சிலிர்ப்பை தாண்டிய உணர்வாக உள்ளது. உலக அளவில் தனித்துவம் பெற்ற அந்த நிறுவனத்தின் ஃபேஷன் வடிவமைப்பாளர் நிக்கோலஸ் கெஸ்குயரே மேற்கொள்ளவிருக்கும் பரப்புரையில் பங்கேற்க இருப்பது உற்சாகத்துடன், பணிவையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபிகாவின் இந்தப் பதிவுக்கு அவரது காதல் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங், 'அடுத்த கட்டம்' என்று பாராட்டியுள்ளார்.
இதனிடையே லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பரப்புரையில் இந்த ஆண்டுக்கான கருபொருளாக 'பல்ப் ஹாரர்' எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி திகில் திரைப்படங்கள், புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ஃபேஷன் ஆடைகள் அணிந்தவாறு பிரபலங்கள் போஸ் கொடுத்துள்ள 25 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், பிரபல எழுத்தாளர் மிச்செல் கேக்னான் திகில் புத்தகத்தை பின்னணியாகக் கொண்டு தீபிகா போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ஃபேஷன் வடிவமைப்பாளர் கெஸ்குயரே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ஜேஎன்யு மாணவர்கள் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றது, சப்பாக் பட வெற்றி, மன நல விழிப்புணர்வுக்காக சர்வதேச அளிவில் கிறிஸ்டல் விருது என 2020ஆம் ஆண்டை சிறப்பாக தொடங்கியிருக்கிறார் தீபிகா. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது உலக அளவில் புகழ் பெற்ற ஃபேஷன் நிறுவனத்தின் பரப்புரையிலும் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: மனநல விழப்புணர்வுக்காக சர்வதேச விருதைப் பெற்ற தீபிகா